×

அப்போ நான் ரெடி...கார்த்திக் கலாட்டா

லண்டன்: இந்திய அணி விக்கெட் கீப்பர்கள்  ரிஷப் பன்ட்,  விருத்திமான் சாஹா இருவரும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் இருப்பதால், அவர்களுக்கு பதிலாக தான் களமிறங்கத் தயாராக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர்   ரிஷப் பன்ட், டெல்டா வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். பந்து எறிதல் சிறப்பு பயிற்சியாளர் தயானந்த் கரானிக்கும் தொற்று உறுதியாகி இருப்பதால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மாற்று விக்கெட் கீப்பர் சாஹா, அபிமன்யு ஈஸ்வரன், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அணியில் உள்ள 2 கீப்பர்களும் குவாரன்டைனில் உள்ள நிலையில் இந்தியா பயிற்சி ஆட்டத்தில்  விளையாட வேண்டி உள்ளது.    கவுன்டி சாம்பியன் லெவன் அணிக்கு எதிரான அந்த 3 நாள் ஆட்டம்  ஜூலை 20ல் தொடங்குகிறது. தொடர்ந்து ஆக.4  முதல் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட வேண்டும். அதற்கு முன்பு இருவரும் அணிக்கு திரும்பும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், பயிற்சி ஆட்டத்துக்கு விக்கெட் கீப்பர் தேவை. இந்தியாவில் இருந்து யாரையாவது வரவழைத்தாலும், அவர்கள் குறைந்தது ஒரு வாரம் ‘குவாரன்டைனில்’ இருக்க வேண்டும். இந்நிலையில்   தினேஷ் கார்த்திக், ‘தனது பேட், கையுறை அடங்கிய ‘கிட்’  படத்தை  சமூக ஊடகத்தில்  வெளியிட்டு கூடவே ‘சும்மா சொல்கிறேன்’ என்று எழுதியுள்ளார்.

வர்ணனையாளராக இங்கிலாந்தில் தங்கியுள்ள  கார்த்திக், தான் விக்கெட் கீப்பராக பணியாற்ற தயாராக இருப்பதை  நாசூக்காக பிசிசிஐக்கு சொல்லியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ள அந்த பதிவுக்கு நேற்று இரவு வரை பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.
அணியில் உள்ள லோகேஷ் ராகுலும்  விக்கெட் கீப்பர்தான்.  இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸி.க்கு எதிரான ஒருநாள்  ஆட்டங்களில் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளார். இப்போது இங்கிலாந்தில் அணியினருடன்  உள்ள ராகுல்  பயிற்சி ஆட்டத்தில் விளையாட நேற்று முன்தினம் டர்ஹாம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்டில்...
கார்த்திக் இதுவரை 26 டெஸ்டில் விளையாடி 1025 ரன் எடுத்துள்ளார் (அதிகம் 129 ரன், சராசரி 25.00, சதம் 1, அரை சதம் 7). கடைசியாக 2018ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடந்த டெஸ்டில் விளையாடி உள்ளார்.  அந்த ஆண்டு அவர் ஆப்கானிஸ்தான்(1), இங்கிலாந்துக்கு (4) எதிராக விளையாடிய 5 டெஸ்ட்களில் எடுத்த மொத்த ரன் 26 மட்டுமே. அதே சமயம் உள்நாட்டு கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த  சையத்   முஷ்டாக் அலி டி20 தொடரில் கார்த்திக் தலைமையிலான  தமிழக அணிதான் சாம்பியனாகி உள்ளது. ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

Tags : Reddy ,Karthik Galata , Karthik, wicket-keeper, Rishabh Punt, Viruthiman Saha
× RELATED தெலங்கானா முதல்வர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை